அன்புமணி - ராமதாஸ் pt
தமிழ்நாடு

பாமகவில் அதிகார மோதலா? பாமக எம்எல்ஏ அருள் ஓபன் டாக்!

நேற்று விழுப்புரத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் இளைஞரணி தலைவரை நியமிப்பதில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே வார்த்தை மோதல் ஏற்பட்ட நிலையில், இன்று தைலாபுரம் வீட்டில் கிட்டதட்ட 1 மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தது.

Rishan Vengai

நேற்று விழுப்புரத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழுக் கூட்டத்தில், பாமகவின் இளைஞரணி தலைவரை தேர்ந்தெடுப்பதில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவருடைய மகன் அன்புமணி இடையே வார்த்தை போர் ஏற்பட்டது. இதன் பின்னணியில் பாமக இளைஞரணி தலைவராக ராமதாஸின் மகள் வழி பேரன் முகுந்தனை நியமனம் செய்து ராமதாஸ் அறிவித்ததற்கு அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அன்புமணியின் எதிர்ப்பு பேச்சால் கோபமடைந்த ராமதாஸ், “கட்சியை உருவாக்கியவன் நான், வன்னியர் சங்கத்தை உருவாக்கியவன் நான். எனவே முடிவை நான்தான் எடுப்பேன். அதை ஏற்க முடியாதவர்கள் இருந்தால் இருங்கள், இல்லையேல் போகலாம்” என மேடையிலேயே அன்புமணியிடம் காட்டமாக கூறினார். அன்புமணி உடனே எழுந்து, “என்னை சந்திக்க நினைப்போர், இனி பனையூரில் உள்ள புதிய அலுவலகத்தில் என்னை சந்திக்கலாம்” என சொல்லி எழுந்துச் சென்றார்.

இந்த விவகாரம் கட்சியில் பிளவு ஏற்பட்டதை குறிப்பதாக பேசுபொருளான நிலையில், இன்று தைலாபுரத்தில் உள்ள வீட்டில் 1 மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

எல்லா கட்சியிலும் நடப்பதுதான்..

பொதுக்குழுவில் நடந்த வார்த்தை மோதலுக்கு பிறகு தைலாபுரத்தில் உள்ள வீட்டில் கிட்டத்தட்ட 1 மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தது.

இந்த பேச்சுவார்த்தையில் கருத்து மோதலில் ஈடுபட்ட ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸுக்கு இடையே சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தை முடிந்து பேசிய அன்புமணி, “இன்று தைலாபுரம் தோட்டத்தில் ஐயாவுடன் கட்சியின் வளர்ச்சி, வருகின்ற சட்டமன்றத் தேர்தல், சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான போராட்டங்கள் போன்றவை குறித்து குழுவாக விவாதித்தோம். வருகின்ற ஆண்டு எங்களுக்கு மிக முக்கியமான ஆண்டு.

எங்களுடைய கட்சி ஜனநாயக கட்சி , இதில் நடக்கின்ற பொதுக்குழுவில் காரசார விவாதங்கள் நடப்பது என்பது எல்லா கட்சிகளிலும் நடக்கும் வழக்கமான ஒன்றுதான். எங்களுக்கு ஐயா ஐயாதான். எங்களுடைய கட்சியின் உட்கட்சி பிரச்னை குறித்து நீங்கள் பேசுவதற்கு அவசியம் இல்லை..அதை நாங்கள் பேசிக்கொள்வோம்” என்று தெரிவித்தார்.

கட்சியில் நடப்பது என்ன? பாமக எம்எல்ஏ விளக்கம்!

பாமக கட்சியில் அதிகார மோதல் வெடித்துள்ளதா? பிளவு ஏற்பட்டுள்ளதா? என்று கிளம்பிய சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் விதமாக பாமக எம்எல்ஏ அருள் புதியதலைமுறையிடம் ஓப்பனாக பேசியுள்ளார்.

கட்சி விவகாரம் குறித்து பேசிய பாமக எம்எல்ஏ, “ராமதாஸ், அன்புமணி இடையே எந்த பிரச்னையும் இல்லை. எங்கள் கட்சி ஒரு ஜனநாயக கட்சி, இதில் நடைபெற்ற கருத்து மாற்றத்தை ஊடகங்கள் பெரிதுபடுத்திவிட்டன. கருத்து பரிமாற்றத்தை முரண்பாடு என்று சொல்ல முடியாது. பாமக கட்சியில் சிறிதளவுகூட எந்தவிதமான கருத்து மோதலும் இல்லை, இருவரையும் ஒன்றாக பார்க்கிறோம்” என்று தெரிவித்தார்.