மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்காவிட்டால் அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த 8 எம்எல்ஏக்கள் பதவி விலகுவோம் என்றும் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுக்கட்சி எம்எல்ஏக்கள் 2 பேரை பதவி விலகவும் சொல்லுவோம் என்று திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த 8 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வோம் என்று கூறினார். மேலும், மாற்றுக்கட்சியைச் சேர்ந்த 2 எம்எல்ஏக்களையும் ராஜினாமா செய்ய வலியுறுத்துவோம் என்றும் அவர் கூறினார்.
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம்எல்ஏ போஸ் எம்எல்ஏக்கள் பதவி விலகுவோம் என்றார். அமைச்சர் உதயகுமாரிடம், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தோப்பூர் ஏற்ற இடமாக இருக்கிறது. இங்கு மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்று நிருபர்கள் கேட்ட போது, மக்களுக்கான வளர்ச்சிப்பணிகளை நிறைவேற்றவே நான் பதவியில் இருக்கிறேன். அவற்றை நிறைவேற்ற இயலாவிட்டால் பதவியை ராஜினாமா செய்வேன் என்றார்.