தமிழ்நாடு

பிரியாணி கடை தாக்குதல்: நேரில் நலம் விசாரித்தார் ஸ்டாலின்

பிரியாணி கடை தாக்குதல்: நேரில் நலம் விசாரித்தார் ஸ்டாலின்

Rasus

சென்னை விருகம்பாக்கத்தில் தாக்குதலுக்குள்ளான பிரியாணி கடைக்கு சென்ற மு.க.ஸ்டாலின் திமுகவினரால் தாக்கப்பட்ட ஊழியர்களிடம் நேரில் நலம் விசாரித்தார்.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பிரியாணிக் கடை ஒன்றில் சிலர் அத்துமீறி அங்குள்ள ஊழியர்களை கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி இருந்தனர். இதுதொடர்பான வீடியோ காட்சி ஒன்றும் வெளியானது. சம்பவம் தொடர்பாக கடையின் உரிமையாளர் மற்றும் மேலாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் கடை ஊழியர்களைத் தாக்கிய அந்தக் கும்பல் தலைமறைவாகிவிட்டது. இது தொடர்பாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவானவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் கடை உரிமையாளர் மற்றும்  ஊழியர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் திமுகவினர் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, பிரியாணிக் கடை ஊழியர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு உறுப்பினர்களை தற்காலிக நீக்கம் செய்து திமுக நடவடிக்கை எடுத்தது. விருகம்பாக்கம் வடக்குப் பகுதியைச் சேர்ந்த யுவராஜ், திவாகர் ஆகிய இருவரும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தெரிவித்தார்.

இதனிடையே, திமுகவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் யார் நடந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் தாக்குதலுக்குள்ளான பிரியாணி கடைக்கு சென்ற மு.க.ஸ்டாலின், திமுகவினரால் தாக்கப்பட்ட ஊழியர்களிடம் நேரில் நலம் விசாரித்தார்.