விசிக ஊடகப்பிரிவு செயலாளராக இருந்தவரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான பனையூர் பாபு கடந்த மே 24ம் தேதி விசிகவில் இருந்து விலகிய நிலையில், தன்னுடைய ஆதரவாளர்களுடன் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். 2021 சட்டப்பேரவை தேர்தலில் செய்யூர் சட்டமன்ற தொகுதியில் விசிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பனையூர்பாபு, 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பின்பாக விசிக தலைவர் திருமாவளவன் பல இடங்களில் முரணாக முடிவெடுப்பதாகவும், மாற்றி மாற்றி பேசி வருவதாகவும் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்து கட்சியில் இருந்து வெளியே வந்தார். இந்தசூழலில் தான், இன்று திமுகவில் இணைந்திருக்கிறார்.
இதற்கான கூட்டம் சென்னை அறிவாலயத்தில் நடைபெற்ற நிலையில், பனையூர் பாபு மற்றும் அவரது ஆதரவாளர் உள்ளிட்ட மாற்றுக்கட்சியினர் 1,000-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்திருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், ”கொண்ட கொள்கைகளில் உறுதியாக இருந்து செயல்பட்டவர் பனையூர் பாபு. சட்டமன்றத்தில் அவரை கவனித்திருக்கிறேம். அமைதியாக வந்து செல்வார். அதேசமயம், சட்டப்பேரவையில் பேசும் போது, ஆக்கபூர்வமான கருத்துக்களை தன்னுடைய தொகுதிக்கு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை அங்கே வலியுறுத்தி பேசக்கூடியவர்.
அவரது கொள்கையில், பயணத்தை தொடர சரியான இயக்கம் திமுக தான் என நினைத்து அவர் ஏன் இணைந்திருக்கிறார். அவரையும் அவரோடு வந்திருக்கும் அனைவரையும் இந்த இயக்கத்தின் தலைவனாக மட்டுமல்ல, தலைமை தொண்டனாக வருக வருக என வரவேற்கிறேன். நீங்கள் ஏற்கனவே பயணித்த இயக்கத்தை பற்றி விமர்சிக்க தேவையில்லை, மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் இருக்கும் என்று அண்ணா சொல்லி இருக்கிறார். யாரையும் குறைத்து மதிப்பிட்டு பேச வேண்டிய அவசியம் இல்லை” எனத் தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து தவெக தலைமையிலான தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய அவர், ”தவெக அரசு பொறுப்பேற்ற போதே சொல்லி இருக்கிறோம் ஆறு மாதத்திற்கு விமர்சிக்க மாட்டோம் என்று, ஆனால் ஆறு மாதத்திற்கு உள்ளேயே பேசக்கூடிய சூழல் வந்துவிடுமோ என்ற அச்சம் வந்துவிட்டது; பலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆறு மாதம் அல்ல ஐந்து மாதம் அல்ல மூன்று மாதமாவது தாங்குமா? என்ற கேள்விக்குறியோடு இந்த ஆட்சி நடப்பதாக தெரிவித்தார்.