தமிழ்நாடு

சாதி மத பேதமின்றி சமத்துவ ஜல்லிக்கட்டு: ஸ்டாலின் வேண்டுகோள்

Rasus

சாதி மத பேதமின்றி ஜல்லிக்கட்டை சமத்துவ விளையாட்டாக கொண்டாட வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தில் எந்தவித பேதமுமின்றி தமிழினப் பற்று மட்டுமே மேலோங்கி இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். அமைதி வழி அறப்போரின் முடிவில் பல இளைஞர்கள் ரத்தம் சிந்தும் அளவிற்கு காவல்துறை தடியடி நடத்தியிருப்பதாகவும் வாகனங்களுக்கு காவலர்களே தீவைக்கும் கொடுமை என பல அதிர்ச்சி சம்பவங்கள் நடைபெற்று இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தவறுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள ஸ்டாலின் மக்கள் எழுச்சியால் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் ஜல்லிக்கட்டு நடந்த பல ஊர்களில் கசப்பான சம்பவங்கள் நடந்துள்ளதை மறுக்க முடியாது என தெரிவித்துள்ள அவர், அனைவரும் ஒன்றிணைந்து போராடி ஜல்லிக்கட்டு உரிமையைப் பெற்றுத் தந்துள்ளதாகவும் சாதிமத பாகுபாடுகள் இன்றி நடைபெறும் சமத்துவ ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியே மகிழ்ச்சி தரும் என்பதை உணர்ந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்‌று‌ம் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.