தமிழ்நாடு

போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகங்கள் செயல்பட வேண்டும் - மு.க.ஸ்டாலின்

webteam

தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வரும் இந்த நேரத்தில் போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகங்கள் செயல்பட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மூன்று நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வருமுன் காக்கும் நடவடிக்கைகளில் அரசு இறங்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இது குறித்து ட்வீட் செய்துள்ள ஸ்டாலின், ''தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வரும் இந்த நேரத்தில் போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகங்கள் செயல்பட வேண்டும். சாலைகளில் வெள்ளமெனத் தேங்கி இருக்கும் தண்ணீர், பல ஊர்களில் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. மின் வயர்கள் துண்டிக்கப்பட்டு மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது.

தண்ணீர் தேக்கம் காரணமாக கொசு உற்பத்தி பெருகி, அதன் மூலம் டெங்கு பரவுவது அதிகரிக்கக் கூடும். வருமுன் காக்கும் நடவடிக்கைகளில் அரசும், அரசு அதிகாரிகளும் உடனடியாக இறங்கிட வேண்டும். உடனடி நிவாரணப் பணிகளையும் உடனடியாகத் தொடங்கிட வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.