கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினரான மு.க.ஸ்டாலின், தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் கூட அவ்வப்போது கோடை மழை பெய்கிறது. இதனால் ஓரளவிற்கு மக்கள் நிம்மதி அடைகின்றனர். ஆனால் சென்னையை எடுத்துக் கொண்டால் அனல் பறக்கும் வெயில்தான். சென்னை மக்கள் மழையை பார்த்தே மாதக் கணக்கு ஆகிறது. ஒரு சின்ன மழையாவது வராதா என்ற ஏக்கத்தில் சென்னை மக்கள் உள்ளனர். அத்துடன் தண்ணீர் தட்டுப்பாடும் தலைவிரித்தாடுகிறது.
இந்நிலையில், கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினரான மு.க.ஸ்டாலின், தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். அதன்படி, தனியார் தண்ணீர் லாரிகள் மூலமாக பெரியார் நகர், அகரம் உள்ளிட்ட பகுதிகளில், குடிநீர் விநியோகம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதுமட்டுமில்லாமல் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதிக்குட்பட்ட இடங்களில் தண்ணீர் விநியோகம் செய்யுமாறு, அக்கட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.