தமிழ்நாடு

நீட் மசோதாவிற்கு மே 7 ஆம் தேதிக்கு முன் ஒப்புதல் பெற வேண்டும்: ஸ்டாலின்

நீட் மசோதாவிற்கு மே 7 ஆம் தேதிக்கு முன் ஒப்புதல் பெற வேண்டும்: ஸ்டாலின்

webteam

மாணவர்களின் நலன் கருதி மே 7ஆம் தேதிக்கு முன், நீட் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான ’நீட்’ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 1.3.2017 அன்று முடிந்து விட்டது. எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர, மே 7 ஆம் தேதி ’நீட்’ தேர்வு நடைபெறவிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

’நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட இறுதி நாளுக்கு ஒரு தினத்திற்கு முன் 27.2.2017 அன்று டெல்லி சென்று பிரதமரை சந்தித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நீட் சட்டத்திற்கு விரைவில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றுத் தருமாறு கோரியிருக்கிறார். ஒரு கண்துடைப்பு நாடகத்திற்குத்தான் பிரதமருடனான சந்திப்பை அதிமுக அரசு பயன்படுத்திக் கொண்டிருக்கிறதே தவிர, மாணவர்களின் நலனைக் காப்பாற்றுவதில் எந்த ஆர்வமும் இல்லை. குறிப்பாக, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற முன்கூட்டியே நடவடிக்கைகளை எடுக்கவில்லை என ஸ்டாலின் அந்த அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளார்.

இன்றைய சூழ்நிலையில் மாணவர்கள் பலர், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை நம்பி நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் இருக்கிறார்கள். மருத்துவராகும் மாணவர்களின் எதிர்காலக்கனவு தமிழக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியாகி இருக்கிறது. ’நீட்’ தேர்வு பற்றிய நிலை என்ன என்பது தெரியாமல், தேர்வு நடைபெறும் மே 7 ஆம் தேதியை எதிர்நோக்கி மன அழுத்தத்துடனும், குழப்பத்துடனும் மாணவர்கள் காத்திருக்கிறார்கள்.

இனிமேலும் மாணவர்களின் நலனுடன் விளையாட வேண்டாம் என்றும் உடனடியாக மத்திய அரசை அணுகி, நீட் தேர்வு தேதியான மே 7 ஆம் தேதிக்கு முன் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நீட் மசோதாவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் தமிழக அரசை ஸ்டாலின் அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசும் தாமதம் செய்யாமல் நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு நிரந்தர விலக்கு அளிப்பதற்கு மாணவர்கள் நலன் கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.