’நாம் ஜெயித்துவிடக்கூடாது என்பதற்காக சிலரை கட்டாயப்படுத்தி கட்சி ஆரம்பிக்க வைத்துள்ளனர்’ என திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் திமுகவின் ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இக்கூட்டத்தில் பேசிய துரைமுருகன், ஜனவரி முதல் வாரத்தில் இருந்து, ஸ்டாலின் நேரடி தேர்தல் பரப்புரையில் ஈடுபடவுள்ளார் . 16ஆயிரம் கிராமசபைக் கூட்டங்களையும் ஸ்டாலின் நடத்த விரும்புகிறார் என பேசினார்.
'அதிமுகவை நிராகரிக்கிறோம்' என்ற பெயரில் பரப்புரை நடைபெறும் என்றும், அதே பெயரில் கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்றும் திமுக குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்தக் கூட்டத்தின்போது 'அதிமுகவை நிராகரிக்கிறோம்' என்ற வீடியோவும் வெளியிடப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின்,
''நம்மால்தான் தமிழகத்தை வெல்ல முடியும்; நம்மால்தான் தமிழகத்தை ஆள முடியும்.உங்களுடைய சக்தியை முழுமையாக பயன்படுத்தினால்தான் முழுமையான வெற்றியை பெறமுடியும். தமிழகத்தில் அடுத்து அமையவுள்ள ஆட்சி திமுக ஆட்சிதான் என்பதை கூறிக்கொள்கிறேன். நாம்தான் வெல்லப் போகிறோம்; ஆனால் அந்த வெற்றியை எளிதாக பெறவிட மாட்டார்கள்.2004,2019 மக்களவைத் தேர்தலில் வென்றதை போன்ற வெற்றியை சாத்தியப்படுத்த வேண்டும். நாம் ஜெயித்துவிடக்கூடாது என்பதற்காக சிலரை கட்டாயப்படுத்தி கட்சி ஆரம்பிக்க வைத்துள்ளனர்'' என பேசினார்.