கடந்த சில தினங்களுக்கு முன்பு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சரத்குமார், பொது இடத்தில் போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையானது. இந்த பழைய வீடியோ தொடர்பாக அவர் வீடியோ வெளியிட்டு விளக்கம் கொடுத்திருந்தார்.அந்த விளக்கமும் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
இதனையடுத்து, அமைச்சர் சரத்குமாரை பதவி விலகக்கோரி, தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தை இன்று அறிவித்திருந்தது திமுக மாணவரணி. அந்த வகையில் தான், இன்று காலை 9.30 மணிக்கு எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் போராட்டம் நடைபெறவிருந்தது. எனினும், போராட்டம் நடத்த அனுமதிக்காக 5 வேலை நாட்களுக்கு முன்பு கடிதம் அளித்திருக்க வேண்டும் எனக் கூறி சென்னை பெருநகர காவல்துறையினர் அனுமதி மறுத்திருக்கின்றனர்.
தொடர்ந்து, திமுகவினர் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில்,அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், அரசு பொதுப்பணத்தை முறைகேடு செய்ததாக கூறி முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சமீபத்தில் சோதனை மேற்கொண்டது.
தொடர்ந்து, முந்தைய திமுக ஆட்சியில் நடந்த பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல் புகார்கள் குறித்து தற்போதைய தவெக அரசு தீவிர விசாரணைகளைத் தொடங்கியுள்ளது. இதில் திமுகவின் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கே.என்.நேரு, செந்தில் பாலாஜி, சேகர் பாபு, மூர்த்தி, அன்பில் மகேஸ் ஆகியோரை லஞ்ச ஒழிப்புத் துறை குறிவைத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்தசூழலில் தான், தமிழக அரசை விமர்சித்து முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “Thug Life” Story போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த தி.மு.க.வினர் கைது!
த.வெ.க. ஆட்சியை விமர்சிப்பதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அவர்கள் மீது வழக்கு! முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களது வீட்டில் ரெய்டு!
இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட, தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம் நீண்டகாலம் நீடிக்காது!
அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்! டேக் டைவர்ஷன்… டேக் டைவர்ஷன்” என ஓடும் இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு, மக்களே பாடம் புகட்டுவார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.