சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக வைக்கப்பட்டிருந்த அலங்காரங்களை ஒரு கும்பல் வலுக்கட்டாயமாக புகுந்து அடித்து நொறுக்கிய சம்பவம் நாடு முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மத மாற்றங்களுக்கு எதிராக 'சர்வ இந்து சமாஜ்' உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் நேற்று (புதன்கிழமை ) மாநிலம் தழுவிய பந்த்-திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். குறிப்பாக, கான்கேர் மாவட்டத்தில், மதம் மாறிய நபர் ஒருவரின் அடக்கம் தொடர்பாக ஏற்பட்ட மோதல் மற்றும் மத மாற்ற விவகாரங்களைக் கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது.
இந்த பந்த் போராட்டத்தின் ஒரு பகுதியாக, ராய்ப்பூரில் உள்ள பிரபல வணிக வளாகத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், அங்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக வைக்கப்பட்டிருந்த அலங்காரத் தோரணங்கள் மற்றும் கிறிஸ்துமஸ் மரம் போன்றவற்றைச் சேதப்படுத்தினர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
மாநிலத்தில் கட்டாய மத மாற்றங்களைத் தடுக்கக் கோரியும், அதற்கு எதிராகக் கடுமையான சட்டத்தைக் கொண்டு வர வலியுறுத்தியும் இந்த பந்த் நடத்தப்பட்டது. ராய்ப்பூர் மற்றும் பிற நகரங்களில் இந்த பந்த் காரணமாகக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. வணிக வளாகத்தில் நடந்த இந்த வன்முறையைத் தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்தச் சம்பவத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்கட்சிகளுக்கும் இந்த சம்பவத்திற்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த சம்பத்தை கண்டித்து முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ”சிறுபான்மையினர் அச்சமின்றி வாழத் துணையிருப்பதில்தான் பெரும்பான்மையினரின் பலமும் இருக்கிறது; குணமும் இருக்கிறது. பெரும்பான்மை என்ற பெயரில் சில வலதுசாரி வன்முறைக் கும்பல்கள் தாக்குதல்களிலும் கலவரங்களிலும் ஈடுபடுவது, அதுவும் - மாண்புமிகு பிரதமர் அவர்கள் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கெடுக்கும்போதே ஈடுபடுவது, நாட்டு மக்களுக்குத் தவறான செய்தியையே கொண்டு சேர்க்கும்.
மணிப்பூர் கலவரங்களைத் தொடர்ந்து, இப்போது ஜபல்பூர் - ராய்பூர் மற்றும் பிற இடங்களிலும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் என்பதை நல்லிணக்கத்தை விரும்பும் நாட்டு மக்கள் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒன்றிய பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் 74% அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படும் புள்ளிவிவரங்கள், எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகளை உணர்த்துகிறது. எனவே, நாட்டுமக்களைப் பிளவுபடுத்திக் குளிர்காய நினைக்கும் கலவரக் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டியது நம் அனைவரது பொறுப்பும் கடமையுமாகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.