ஆடம்பர கொண்டாட்டங்களை தவிர்த்து அவதியுறும் மக்களையும், மீனவர்களையும் காக்க வேண்டும் என அரசுக்கு, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அலங்கார வளைவு சர்ச்சைகளுக்கு இடையே கோவையில் இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் பங்கேற்பதற்காக அமைச்சர்களும், கட்சித் தொண்டர்களும் பங்கேற்கவுள்ளனர். இந்நிலையில் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெல்லை, தூத்துக்குடி, தேனி, ராமநாதபுரம் மாவட்டங்கள் மழை, வெள்ளம், புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் கோவையில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சுட்டிக்காட்டியுள்ள ஸ்டாலின், ரோம் நகரம் பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்ததற்கு சற்றும் குறைவில்லாத அலட்சிய-ஆவணப் போக்காகும் என்று விமர்சித்துள்ளார். இந்த அலட்சியத்தையும், ஆணவத்தையும் விடுத்து, ஆடம்பர கொண்டாட்டங்களை நிறுத்திவிட்டு, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட மக்களின் துயர் துடைக்கும் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.