தேர்தலில் திமுக தோல்வியடைந்த நிலையில், முதலமைச்சர் பதவியை மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்தார்.
234 தொகுதிகளுக்கான தமிழக சட்டமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற நிலையில், அதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில், காலை முதலே விஜயின் தவெக ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. இறுதியில், அக்கட்சி 108 இடங்களைப் பிடித்து அரியணை ஏற இருக்கிறது. மறுபுறம் திமுக மற்றும் அதிமுக ஆகிய கூட்டணிக் கட்சிகள் பெருத்த தோல்வியைச் சந்தித்துள்ளன. திமுக கூட்டணிக்கு 73 இடங்களும் அதிமுக கூட்டணிக்கு 53 இடங்களும் கிடைத்துள்ளன. முக்கியமாக அக்கட்சியைச் சார்ந்த பல மூத்த தலைவர்கள் தோல்வியைச் சந்தித்தனர்.
அந்த வகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் கொளத்தூர் தொகுதியில் தோல்வியைத் தழுவினார். நேற்று காலை முதலே பின்னடைவைச் சந்தித்து வந்த அவர், 22-வது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அதிகாரப்பூர்வமாகத் தோல்வியைத் தழுவினார். இந்தத் தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வி.எஸ்.பாபு, 9,122 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த நிலையில், தேர்தலில் திமுக தோல்வியடைந்த நிலையில், முதலமைச்சர் பதவியை மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ராஜேந்திர அர்லேகருக்கு அனுப்பி வைத்தார். அதேநேரத்தில், திமுக கூட்டணி 73 இடங்களைப் பெற்றுள்ள நிலையில், அது எதிர்க்கட்சியாகச் செயல்பட இருக்கிறது.