தமிழ்நாடு

தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைவதற்கான முடிவை எடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைவதற்கான முடிவை எடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

webteam

‘தமிழகத்தில் ஒரு ஆட்சி இல்லை என்ற நிலை உருவாகியிருப்பதால், பொறுப்பு ஆளுநர் அவர்கள் அரசியல் சாசனப்படி தமிழகத்தில் ஒரு நிலையான ஆட்சி அமைவதற்கான முடிவை எடுக்க வேண்டும்’ என திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சசிகலா நடராஜன் அவர்கள் செயல்படவே விடவில்லை என்பதை மிகத்தெளிவாக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தன்னுடைய பேட்டியில் சொல்லியிருக்கிறார். இதைத்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தொடர்ந்து நாங்கள் சொல்லிக் கொண்டிருந்தோம். நாங்கள் மட்டுமல்ல தமிழகத்தில் இருக்கும் எல்லா தரப்பு மக்களும், அதிமுக வை சேர்ந்த உண்மையான விசுவாசிகள், தொண்டர்கள் இதைத்தான் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அனைத்துமே இந்த ஆட்சியில் மர்மமாகவே இருந்து வருகிறது. காரணம் என்னவென்று கேட்டால், முதலமைச்சரையே மிரட்டி ராஜினாமா கடிதம் வாங்கியிருக்கிறார்கள். எனவே நான் கேட்க விரும்புவது ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்த முதலமைச்சருக்கே இந்தகதி ஏற்பட்டிருக்கிறது. எனவே மிரட்டியவர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்போது தமிழக அரசு காபந்து அரசாக இருக்கும் நிலைமையில் முதல்வரே இப்படி சொல்லியிருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது. இப்போதைக்கு தமிழகத்தில் ஒரு அரசாங்கமே இல்லை என்ற நிலை தான் உருவாகியுள்ளது. எனவே உடனடியாக தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் அவர்கள் அரசியல் சாசனப்படி தமிழகத்தில் ஒரு நிலையான ஆட்சி அமைவதற்கான நிலையை எடுக்க வேண்டுமென்று திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.