சட்டப்பேரவையில் சபாநாயகர் தன் இருக்கையில் இல்லாத நேரத்தில் திமுக உறுப்பினர்கள் அதில் அமர்ந்ததை திமுக செயல்தலைவர் என்கிற முறையில் தான் ஏற்கவில்லை எனவும், இது போன்ற செயல்கள் இனி ஒருபோதும் மேற்கொள்ளாமல் உறுப்பினர்கள் கண்ணியம் காத்திட வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் சபாநயாகர் ஒருதரப்பாக செயல்பட்டதை கண்டு தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
தேர்தலில் வாக்குகளை ரகசியமாக பதிவு செய்கிறோம். அதனைப்போல் எம்எல்ஏ-களுக்கு ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கூடாதா..? என சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் கேள்வி எழுப்புவதாகவும் கூறியுள்ளார். மக்களின் கோரிக்கையை தான் பேரவையில் திமுக வைத்ததாகவும், ஆனால் ஆட்சியாளருக்கு ஆதரவாக சபாநாயகர் சட்டமன்றத்தில் செயல்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டப்பேரவையை ஒத்திவைத்து சபாநாயகர் தன் இருக்கையிலிருந்து வெளியேறிய நிலையில், காலியாக இருந்த அவரது இருக்கையில் தி.மு.க உறுப்பினர்கள் அமர்ந்ததை எதிர்க்கட்சித் தலைவர், தி.மு.க.வின் செயல்தலைவர் என்கிற முறையிலும் தான் அதனை ஏற்கவில்லை என கூறியுள்ளார். திமுக-வினர் மேற்கொள்ளும் துரும்பளவு செயல்பாடுகளும் தூணாக்கப்படும் என்பதை எம்எல்ஏ-க்கள் கவனத்தில் கொண்டு இத்தகைய செயல்களை இனி ஒருபோதும் மேற்கொள்ளாமல் கண்ணியம் காத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.