தமிழ்நாடு

பதவி பற்றிக் கவலைப்படாதீர்கள்: பன்னீர்செல்வத்திற்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

webteam

பதவி பற்றிக் கவலைப்படாதீர்கள் என்று முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை நீக்கி விட்டு தான் முதலமைச்சராவது எப்படி என ஆட்சிக்கு வரத் துடிக்கும் அதிமுக தலைமைக்கும், “அதிமுக தலைமையின் விருப்பத்திற்கு மாறாக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையின் கீழ் அதிகாரிகளும், ஆலோசகர்களும் செயல்பட முடியாத சூழ்நிலையும்” இன்றைக்கு தமிழக அரசு நிர்வாக இயந்திரத்தை நிலைகுலைய வைத்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், முதலமைச்சர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் திடீரென்று பதவியிலிருந்து விலகியிருப்பது முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான ஆட்சிக்கும், அவர் சார்ந்திருக்கும் கட்சி தலைமைக்கும் ஏற்பட்டுள்ள பனிப்போரின் துவக்கமாகவே தெரிகிறது என குறிப்பிட்டுள்ளார்.

இப்படியொரு நிலையற்ற ஆட்சியில் பாலாறில் புதிய தடுப்பணைகள், சர்க்கரை மானியம் ரத்து செய்யப்படும் ஆபத்து, காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாமல் போனது, “நீட் தேர்வு” சட்ட விவகாரத்தில் மாணவர்கள் மத்தியில் குழப்பம், மெரினா புரட்சியான மாணவர்களின் அறவழிப் போராட்டத்தை காவல்துறை அதிகாரிகளே சீர்குலைத்த காட்சிகள் எல்லாம் ஒவ்வொன்றாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

ஆகவே முதலமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் தன் பதவி பற்றி கவலைப்படாமல் மாநிலத்தில் நிலவும் மக்கள் பிரச்சினைகள், அண்டை மாநிலங்களால் தமிழகத்திற்கு ஏற்படும் பிரச்சினைகள், மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய மத்திய அரசு திட்டங்கள், உதவிகள் போன்றவற்றில் தன் முழுக்கவனத்தை செலுத்தி, தமிழக நலனைக் காப்பாற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், அரசு நிர்வாகம் தன் உத்தரவுக்கு மட்டுமே கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதையும் உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று ஸ்டாலின் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.