தமிழ்நாடு

“தமிழக அரசு கோரும் நிதியை மத்திய அரசு தரவேண்டும்” - ஸ்டாலின்

webteam

கஜா புயல் பாதிப்பு தொடர்பாக தமிழக அரசு கோரிய நிதியை , மத்திய அரசு வழங்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

கஜா புயல் நிவாரண நிதியாக தமிழகத்திற்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, கஜா புயல் பாதிப்புகள் மற்றும் தேவையான நிவாரணத் தொகை குறித்து முதலமைச்சர் பிரதமரிடம் கோரிக்கை மனு அளித்தார். 

இடைக்கால நிவாரணமாக 1,500 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், உடனடியாக மத்திய குழு வந்து புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகவும், விரைவில் மத்திய குழுவை அனுப்புவதாக பிரதமர் உறுதி அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதுதொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், இதற்கு முன் புயல் பாதிப்பின்போது தமிழக அரசு கோரிய முழு தொகையை மத்திய அரசு வழங்கவில்லை என்று சுட்டிக்காட்டினார். அத்துடன் கஜா புயல் பாதிப்பு தொடர்பாக தமிழக அரசு கோரிய நிதியை, மத்திய அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். 

முன்னதாக, கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு திமுக சார்பில் 4 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. நிவாரணப் பொருட்கள் ஏற்‌றப்பட்ட 100 லாரிகளை, திருச்சியில் இருந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார். பாதிக்கப்பட்ட நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு 400 டன் அரிசி, பருப்பு வகைகள், காய்கறிகள், சமையல் எண்ணெய், புடவைகள், வேட்டி சட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.