தமிழ்நாடு

டாஸ்மாக் விவகாரத்தில் மேல்முறையீடு வேண்டாம் : அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

டாஸ்மாக் விவகாரத்தில் மேல்முறையீடு வேண்டாம் : அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

webteam

டாஸ்மாக் கடைகள் திறக்க வேண்டாம் என்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டாம் எனத் தமிழக அரசை திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. இருப்பினும் சமூக இடைவெளி மற்றும் பாதுகாப்புடன் மதுபானம் விற்பனை செய்ய உத்தரவிட்டிருந்தது. மதுபான விற்பனையின் போது, எந்தவித சமூக இடைவெளியும் பின்பற்றப்படவில்லை என இன்று அவசர வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பொது முடக்கம் முடியும் வரை டாஸ்மாக் கடைகளைத் திறக்கக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியது.

இந்நிலையில் டாஸ்மாக் கடைகளை மூடும் உத்தரவுக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டாம் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிர்வாகத் திறமையற்ற குடிக்கெடுக்கும் அதிமுக அரசுக்குத் தக்க பாடமாக, ஊரடங்கு காலம் முடியும் வரை மதுக்கடைகளை மூடவேண்டும் என்னும் உயர்நீதிமன்றத்தின் ‘மக்களைக் காக்கும்’ உத்தரவை திமுக வரவேற்கிறது. மேல்முறையீட்டு முயற்சிகளைத் தவிர்த்து உத்தரவை ஏற்று அதிமுக அரசு நடக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.