தமிழகத்தில் விவசாயிகள் மரணம் இனியும் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை எதிர்க் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பொய்த்ததாலும், காவிரியில் கர்நாடகா போதிய நீர் திறக்காததாலும் பெரும்பாலான மாவட்டங்கள் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன. பயிரிடப்பட்ட விளைநிலங்கள் நீரின்றி வறண்டு வருவதால், பயிர்கள் கருகும் நிலையைக் கண்டு விவசாயிகள் பலர் மரணமடைகின்றனர். வறட்சி பாதித்த பகுதிகளில் விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்கும் நோக்கில், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை வலியுறுத்துவதாக மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், வறட்சி நிலைமை குறித்து அமைச்சர்கள் மாறுபட்டு பேசி வருவதைக் கட்டுப்படுத்தும் கடமையும் பொறுப்பும் முதலமைச்சருக்கு உள்ளதாகவும் ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.