மாணவர்கள் மற்றும் மக்களின் நலன் கருதி ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் எனத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உரிய முன்னறிவிப்பு கொடுத்து நடத்திய போராட்டங்களை, அடக்குமுறை மூலம் ஒடுக்குவது கண்டனத்திற்குரியது எனத் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போதுள்ள அரசிடமிருந்து எவ்வித நியாயத்தையும், நீதியையும் எதிர்பார்க்க முடியாது என்று கூறியுள்ளார்.
இருப்பினும் மாணவர்கள் மற்றும் மக்களின் நலன் கருதி போராட்டத்தை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் கேட்டுக்கொண்டுள்ளார். அறவழியில் போராடிய ஜாக்டோ ஜியோ அமைப்பினர், திமுக ஆட்சி அமையும் வரை பொறுமை காக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சி அமைந்தவுடன் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலித்து நிறைவேற்றப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் போராட்டம் நடத்தியவர்கள் மீதான அதிமுக அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்றும் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.