தமிழ்நாடு

“10% இடஒதுக்கீட்டிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுங்கள்” - ஸ்டாலின் வலியுறுத்தல்

“10% இடஒதுக்கீட்டிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுங்கள்” - ஸ்டாலின் வலியுறுத்தல்

Rasus

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் சட்டமுன்வடிவை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய அவர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு என்பது சமூக நீதிக் கொள்கையை நாசப்படுத்தக்கூடியது என்றார். சமூக நிலையிலும், கல்வியிலும் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு என அரசியல் சட்டத்தின் 15 மற்றும் 16-ஆவது பிரிவுகள் தெளிவாக வரையறுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு என்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்றும் ஸ்டாலின் பேசினார்.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் ஆணையை உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ரத்து செய்ததையும் அவர் சுட்டிக்காட்டினார். சமூக நீதியின் கட்டமைப்பை அசைத்துப் பார்க்க எண்ணும் மத்திய அரசுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தினார்.

முன்னதாக பொருளாதார ரீதியில் நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீட்டை வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவை கூட்‌டத்தில் இதற்கான முடிவு‌ எடுக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடுகள் 50 சதவிகிதத்திற்கு மிகக் கூடாது என்ற உச்சநீதிமன்றம் முன்னர் வழங்கிய தீர்ப்பால் பொருளாதார ரீதியில் நலிவுற்ற பொது பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதில் சிக்கல் உள்ளது. எனவே ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டிற்கான உச்ச வரம்பை 50 சதவிகிதத்தில் இருந்து 60 சதவிகிதமாக அதிகரிக்க வசதியாக அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது.