மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை மூலம் இந்தி மொழி திணிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் தொடர் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முன்னதாக, இதுகுறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்த கருத்துக்கு தமிழ்நாடு எம்பி கனிமொழி உள்ளிட்டோர் கடும் கண்டனங்களைப் பதிவு செய்திருந்தனர். என்றாலும், இந்த விவகாரம் தொடர்ந்து புயலைக் கிளப்பி வருகிறது. தற்போது இதுதொடர்பாக சமீபத்தில் பேசியிருந்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், “ஒவ்வொரு மொழியையும் கற்றுக்கொள்வது அவசியம். மொழி அல்லது பிராந்தியத்தின் அடிப்படையில் நாட்டைப் பிரிக்கக்கூடாது. தமிழக அரசு தங்கள் வாக்கு வங்கி ஆபத்தில் இருப்பதாக உணரும்போது, அவர்கள் பிராந்தியம் மற்றும் மொழி அடிப்படையில் பிளவுகளை உருவாக்க முயற்சிக்கிறார்கள். இந்த நாட்டு மக்கள் எப்போதும் இதுபோன்ற பிளவுபடுத்தும் அரசியலுக்கு எதிராக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் நாட்டின் ஒற்றுமைக்காக உறுதியாக நிற்க வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். அவர், தனது எக்ஸ் தள பக்கத்தில், “இருமொழிக் கொள்கை மற்றும் தொகுதிகள் மறுசீரமைப்பு குறித்த தமிழ்நாட்டின் நியாயமான மற்றும் உறுதியான குரல் நாடு தழுவிய அளவில் எதிரொலிக்கிறது. இதனால் பா.ஜ.க. அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதன் எதிரொலியாக பா.ஜ.க. தலைவர்களின் நேர்காணல்கள் உள்ளது. இப்போது யோகி ஆதித்யநாத் வெறுப்பு குறித்து எங்களுக்குப் போதிக்க விரும்புகிறாரா? எங்களை விட்டுவிடுங்கள். இது முரண்பாடல்ல. இது அதன் இருண்ட அரசியல் கருப்பு நகைச்சுவை. இது முழுக்க முழுக்க அரசியல் டார்க் காமெடி.நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை; திணிப்பு மற்றும் பேரினவாதத்தை எதிர்க்கிறோம். இது வாக்குகளுக்கான கலவர அரசியல் அல்ல. இது கண்ணியம் மற்றும் நீதிக்கான போராட்டம்” என அதில் பதிவிட்டுள்ளார்.