தமிழ்நாடு

மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாதா?: மு.க.ஸ்டாலின் கேள்வி

மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாதா?: மு.க.ஸ்டாலின் கேள்வி

Rasus

தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதினால் மன அழுத்தம் ஏற்படாதா? என அதிமுக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிரேட் முறை, சீருடை மாற்றம், மேல்நிலை முதலாண்டில் பொதுத்தேர்வு என விளம்பர நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகக் குறை கூறியிருக்கிறார்.

கோத்தாரி கல்விக்குழுவின் அறிக்கையிலையே, “ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையுள்ள கல்வியின் தரம் மேல்நிலைக் கல்விக்கு முக்கியம். மேல்நிலைக் கல்வியின் தரம் பல்கலைக்கழக கல்விக்கு முக்கியம்”, என்று கூறியிருப்பதை வசதியாக மறந்து விட்டு, “ஏதோ பதினோறாவது வகுப்பில் பொதுத்தேர்வு நடத்தப்படாதது மட்டுமே மாணவர்களை பாதிக்கிறது” என்று பிரச்சாரம் செய்வது தவறானது என குறிப்பிட்டுள்ளார்.

10,11,12-ஆகிய மூன்று வகுப்புகளிலும் தொடர்ந்து மாணவர்கள் பொதுத்தேர்வை சந்திக்க வேண்டிய கட்டாயம் மாணவர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின், மன அழுத்தத்தைப் போக்க என்ன வழி? மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க என்ன வழி? பள்ளிகளின் தரத்தை படிப்படியாக தேசிய அளவிலான கல்வித்தரத்திற்கு உயர்த்துவதற்கு என்ன வழி? போன்றவை குறித்து சிறந்த கல்வியாளர்கள் கொண்ட குழுவினை அமைத்து, பள்ளிக் கல்வியை, குறிப்பாக 1 முதல் 12 வகுப்பு வரை உள்ள பள்ளிக் கல்வியில் சீர்திருத்தம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்தால் அதனை வரவேற்க திமுக தயங்காது என்றும் ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.