கோடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக ஆளுநரை சந்தித்து முறையிட உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “2006ல் உள்ளாட்சி தேர்தலை நடத்தியது நாங்கள் தான். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் பல ஆண்டுகாலமாக 4 ஊராட்சிகளுக்கு தேர்தலே நடத்தப்படாத சூழல் இருந்தது. மதுரையில் உள்ள பாப்பாரப்பெட்டி, கீரிமங்கலம், நாடார்மங்கலம். விருதுநகர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய கோட்டாட்சியேந்தல். 2006ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அந்த பகுதி மக்களிடையே பேசிய தேர்தலை சுமூகமாக நடத்திய பெருமை நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த காலத்தில் தான். இதனை எடப்பாடி பழனிசாமிக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அதேபோன்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்க வேண்டும், நிதி வழங்கவேண்டும் என்பது எனது தலையிலான குழு முதலமைச்சர் கருணாநிதியிடம் வழங்கி செயல்படுத்தினோம். குட்டை பராமரிப்பு பணிகளை ஊராட்சிகளுக்கு வழங்கினோம். ஒவ்வோரு ஆண்டும் நவம்பர் ஒன்றாம் தேதி ஊராட்சி தினம் கொண்டாடினோம். அடுக்குமாடி வீடுகளை கட்டித்தந்துள்ளோம்.
தமிழகத்தில் உள்ள 12,617 ஊராட்சிகளிலும் நூல் நிலையங்களை உருவாக்கினோம். தண்ணீருக்காக தவித்துக்கொண்டிருந்த ராமநாதபுர மாவட்டத்திற்கு கூட்டுக்குடிநீர் திட்டத்தை கொண்டுவந்தோம். உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதற்கு காரணம் திமுக தான் என முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர் பொய் பரப்புரை செய்கின்றனர். திமுக இடஒதுக்கீடு முறையாக அளித்து முறைப்படுத்தி உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கோரினோம். அதன்பின்னர் உள்ளாட்சி தேர்தலை நடத்துமாறு நீதிமன்றம் பலமுறை உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இதுவரை நீதிமன்றத்தை மதிக்காமல் அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டிற்கு நிகரானது கோடநாடு பங்களா. அவர் இருந்த போதும் சரி, அவர் இறந்த போதும் சரி கோடநாடு பங்களாவில் தொடர் மர்ம மரணங்கள் நடந்துள்ளன. கோடநாடு பங்களா காவலாளி, சிசிடிவி ஆப்ரேட்டர், ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் ஆகியோர் தற்கொலை, கொலை, விபத்தில் இறந்துள்ளனர். இதுதொடர்பாக தான் தெஹல்காவின் செய்தி ஆசிரியர் விசாரித்து வீடியோ வெளியிட்டுள்ளனர். இதில் குற்றவாளிகளாக உள்ளவர்கள் எடப்பாடி பழனிசாமி சொன்னதை தான் செய்ததாக கூறியுள்ளனர். அவர்கள் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் நேரடியாக பதிலளிக்கவில்லை. இதைப்பார்க்கும் போது, எடப்பாடி பழனிசாமி தான் முழுக்குற்றவாளி எனத் தெரிகிறது. அத்துடன் கனகராஜ் மற்றும் சயனை தனக்கு தெரியாது எனவும் அவர் சொல்லவில்லை. இதுபோன்று எந்த பதிலும் அவர் சொல்லவில்லை.
நான் கேட்கிறேன். கொலை புகாரை நிரூபித்தால், அவர் பதவி விலக தயாரா?. மேத்யூஸ் சொல்வது பொய் என்றால், அவர் மீது ஏன் வழக்கு தொடர வேண்டும். இதுதொடர்பாக விசாரணை அமைக்க வேண்டும். இதில் முதலமைச்சர் உட்பட அனைவரையும் விசாரிக்க வேண்டும். அத்துடன் சசிகலா குடும்பத்தை விசாரிக்க வேண்டும். திமுகவின் கோரிக்கை என்னவென்றால், எடப்பாடி பழனிசாமி உடனே ராஜினாமா செய்ய வேண்டும். உயர்நீதிமன்ற நீதிபதி இதனை விசாரிக்க வேண்டும். ஆளுநர் இதுதொடர்பாக முதலமைச்சரை அழைத்து விசாரிக்க வேண்டும். மேத்யூஸுக்கு பாதுகாப்பு தர வேண்டும். இதுதொடர்பாக விரைவில் ஆளுநரை சந்திப்போம். இல்லையென்றால் திமுக நீதிமன்றத்தை நாடும்” என தெரிவித்தார்.