தமிழ்நாடு

பள்ளிகள் திறப்பில் அவசரம் காட்டுவது ஏன்? ஆதங்கத்தில் பெற்றோர்கள்

webteam

பள்ளிகள் திறப்பில் தமிழக அரசு அவசரம் காட்டுவதாக பெற்றோர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதம் முதலே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டுவருகின்றன. மீண்டும் பள்ளிகள் திறப்பது பற்றிய ஆலோசனைகள் நடைபெற்ற நிலையில், நவம்பர் 16-ஆம் தேதி முதல் 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ள தமிழக அரசு, அனைத்துக் கல்லூரிகள், கல்வி நிலையங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்படவும் அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் முழுமையாக விலகாத நிலையில் தற்போது பள்ளிகள் திறப்பு தேவையில்லாத வேலை என பெற்றோர்கள் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். தசரா உள்ளிட்ட பண்டிகைகளுக்கு பின்னர் வடமாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக வேதனை தெரிவிக்கும் பெற்றோர்கள், உலக நாடுகள் சிலவற்றில் கொரோனாவின் இரண்டாவது அலை வீச தொடங்கியிருப்பதாகவும் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே தமிழக அரசு பள்ளிகள் திறப்பில் அவசரம் காட்டாமல், மாணவர்களின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயத்தில் யோசித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர். பெற்றோர்கள் மட்டுமின்றி அரசியல் கட்சி தரப்பிலும் பள்ளிகள் திறப்பிற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பள்ளிகள் திறப்பில் அவசரகோலமான அறிவிப்பு ஏன்? எனக்கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து கருத்து பதிவிட்டுள்ள அவர்,மாணவர்களின் பாதுகாப்பு, விடுதி- உணவு போன்றவை குறித்து குழப்பங்கள் நிலவுகின்றன. கொரோனாவின் இரண்டாவது அலை குறித்த உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டதா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், பெற்றோர்- ஆசிரியர்- மருத்துவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனைகளைச் செய்தாரா? ஜனவரி 2021-ல் அப்போதைய சூழலை ஆராய்ந்துதான் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்க வேண்டும். என தெரிவித்துள்ளார்