மு.க. ஸ்டாலின் Pt web
தமிழ்நாடு

குடும்பத்துடன் லண்டன் புறப்பட்டார் மு.க. ஸ்டாலின்.. இன்பநிதி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பு!!

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் லண்டன் புறப்பட்டார். சென்னையில் இருந்து விமானம் மூலம் துபாய் செல்லும் அவர், அங்கிருந்து லண்டன் செல்கிறார்.

Premkumar S

திமுக மீண்டும் 2-வது முறை ஆட்சியமைக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில், முதன்முறையாக தேர்தலை சந்தித்த விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியிடம் தோற்றிருக்கிறது. இதன்மூலம், தமிழகத்தில் தொடர்ந்து 2-வது முறை திமுக ஆட்சியமைத்தது கிடையாது என்ற வரலாறு தொடர்கிறது. இந்தசூழலில் தான், தமிழகத்தின் முதல்வராக விஜய் பொறுப்பேற்றிருக்கும் நிலையில், ஊழல் தொடர்பான வழக்குகளில் சமரசம் கிடையாது என சட்டப்பேரவையில் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, திமுகவின் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சமீபத்தில் சோதனை நடத்தியிருந்தது. தொடர்ந்து, திமுக 7 முக்கியத் தலைவர்களை லஞ்ச ஒழிப்புத் துறை குறிவைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அனிதா ராதாகிருஷ்ணன்

இதற்கிடையில் தான், நேற்று திமுக சட்டப்பேரவை உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனை, முதல்வர் விஜயை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்தது காவல்துறை. எனினும், நேற்றே அவர் ஜாமீனில் வெளிவந்திருக்கிறார். இச்சம்பவம் அக்கட்சித் தொண்டர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திமுகவின் இத்தகைய அசாதாரண சூழலில் தான், திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் இன்று மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் மகனும், மு.க. ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் விளையாட்டு மேம்பாடு தொடர்பான உயர்கல்வி பயின்று வருகிறார். அவரது பட்டமளிப்பு விழா இந்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதில் பங்கேற்பதற்காகவே ஸ்டாலின் லண்டன் சென்றுள்ளார் என சொல்லப்படுகிறது.

பட்டமளிப்பு விழாவுக்குப் பிறகு, சுமார் 10 நாட்கள் லண்டனில் ஓய்வெடுக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஜூலை 20-க்குப் பிறகு சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.

மு.க. ஸ்டாலின்

லண்டன் புறப்படுவதற்காக இன்று காலை சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு, 500க்கும் மேற்பட்ட திமுகவினர் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். சென்னையில் இருந்து விமானம் மூலம் துபாய் செல்லும் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து லண்டன் செல்கிறார்.

வெளிநாடு புறப்படுவதற்கு முன்னதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியிருந்த கடிதத்தில், "தினமும் அண்ணா அறிவாலயத்திற்கு வரும் நூற்றுக்கணக்கான தொண்டர்களின் உற்சாகமும், அன்பும் எனக்கு புதிய ஆற்றலையும் ஊக்கத்தையும் அளிக்கிறது. அவர்களின் அசைக்க முடியாத ஆதரவு, எனது உறுதியையும் அர்ப்பணிப்பையும் மேலும் வலுப்படுத்துகிறது" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தான் 2 வாரம் அயலகம் செல்வதாகவும் அயலகம் சென்றாலும் அறிவாலயத்திலேயே எனது மனம் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.