தமிழ்நாடு

திருவாரூர் இடைத்தேர்தலில் ஸ்டாலின் போட்டியா ?

திருவாரூர் இடைத்தேர்தலில் ஸ்டாலின் போட்டியா ?

webteam

திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிட அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைவால் காலியாக உள்ள திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி வேட்பு மனுத்தாக்கல் நாளை முதல் ஆரம்பமாக உள்ளது. ஜனவரி 10ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 11ம் தேதி முதல் வேட்பு மனுவை திரும்ப பெறலாம் எனவும், மனுக்களை திரும்ப பெற கடைசி நாள் ஜனவரி 14ஆம் தேதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 28ஆம் தேதி திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை ஜனவரி 31ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு நேற்று முதல் வழங்கப்படுகிறது. மேலும் திமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவின் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து இன்று முதல் நாளை மாலைக்குள் வழங்க வேண்டும். போட்டியிட விருப்பம் தெரிவிப்பவர்களிடம் நாளை மறுநாள்‌ நேர்காணல் நடத்தப்படும் என்றும் திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தனது கோட்டையை தக்கவைக்க திமுக தீவிரம் காட்டி வரும் இந்த நிலையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் தொகுதி என்பதால் ஸ்டாலின் அங்கு போட்டியிட வேண்டும் என மூத்த நிர்வாகிகள் வலியுறுத்துவதாகக் கூறப்படுகிறது. 

இந்த தகவல் வெளியாகிய நிலையில், இடைத்தேர்தல் குறித்து மூத்த நிர்வாகிகளுடன் திமுக தலைவர் ஸ்டாலின், அவரது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். இதில் திமுக பொருளாளர் துரைமுருகன், கொள்கைப்பரப்புச் செயலாளர் ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது திருவாரூர் இடைத்தேர்தலில் ஸ்டாலின் போட்டியிடுவார் என யாரும் கூறவில்லை என்று அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என நாங்கள் கூறவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.