சென்னை கொளத்தூரில் திமுக சார்பிலும் அனிதா சமத்துவ அச்சுவேர்ஸ் அகாடமி சார்பிலும் பொங்கல் விழா நடைபெற்றது. கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே நடைபெற்ற பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பங்கேற்று சமத்துவ பொங்கல் விழாவினை கொண்டாடினார்.
இதன்பிறகு கொளத்தூரில் உள்ள டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் அனிதா அச்சுவேர்ஸ் அகாடமி சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மகளிர்க்கு பொங்கல் பரிசுகளை முதலமைச்சர் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
விழா மேடையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்றி பேசினார். அப்போது பேசுகையில், “கொளத்தூரில் எந்த நிகழ்ச்சி நடைபெற்றாலும் நான் வந்து விடுவேன். தற்பொழுது பொங்கல் விழாவிற்கு வருகை தந்துள்ளேன். பொங்கல் விழா மட்டுமல்லாமல் கிறிஸ்மஸ் விழா, ரம்ஜான் விழா போன்றவற்றிற்கும் நான் வருகை தருகின்றேன்.
என்னுடைய தொகுதியில.. மன்னிக்கவும் நம்முடைய தொகுதியில.. வருவது என்றாலே மகிழ்ச்சிதான். அதுவும் உங்களோடு சேர்ந்து பொங்கல் விழாவில் கலந்து கொள்வது ஸ்பெஷல். அதுவும் பொங்கல் விழாவில் கலந்து கொள்வதென்பது ஸ்பெஷல் உடன் ஸ்பெஷல்.
உங்களுக்கு எப்படி பூரிப்பு இருக்கிறதோ, அதேபோலத்தான் எனக்கும் இருக்கிறது. மேடை மட்டும் இல்லாவிட்டால் நானும் உங்களை போல் கைதட்டி விசில் அடித்து மகிழ்வேன். உங்களுடைய மகிழ்ச்சியில் உங்களுடைய அன்பில் உங்களுடைய ஆதரவில் நானும் கலந்து கொண்டிருப்பேன் என்று உற்சாகமாக பேசினார்.
நம்முடைய திராவிட இயக்கத்தை பொறுத்தவரையில் உரிமையோடு உற்சாகத்தோடு உணர்வோடு கொண்டாட கூடிய விழா தான் பொங்கல் விழா. ஏனென்றால் மற்ற விழாக்களை பார்க்கும் போது அதில் மதம் இருக்கும் ஜாதி இருக்கும். ஆனால் பொங்கல் விழாவில் மட்டும்தான் மதம் ஜாதி எதுவும் கிடையாது. தமிழ் சாதிதான் இருக்கும். தமிழர் திருநாள் இது. வன்முறை கிடையாது.
நம் உழைப்பை போற்றக்கூடிய விழாவாக, ஏழை எளிய மக்கள் கொண்டாடக்கூடிய விழாவாக, வேளாண் பெருங்குடி மக்கள் கொண்டாடக்கூடிய விழாவாக ஒட்டுமொத்த தமிழர்கள் கொண்டாடக்கூடிய விழாவாக அமைந்திருக்கிறது. நம் பண்பாட்டை எடுத்துச் சொல்லக்கூடிய வகையில் வீரமும் விவேகமும் நிறைந்திருக்கக் கூடிய விழாவாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஈரோட்டுச் சிங்கம் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்கள் குறித்து யார் யாரோ பேசிட்டு இருக்காங்க.. அப்படிப்பட்ட பெரியார் குறித்து பேசக்கூடியவர்கள், பெரியாரை விமர்சித்து பேசக்கூடிய கூடியவர்களை எல்லாம் பேசி நான் அவர்களை அடையாளம் காட்ட விரும்பவில்லை.
தந்தை பெரியார் அவர்கள் தனது உயிர் பிரியும் கடைசி நிமிடம் வரை தமிழுக்காக, தமிழ் இனத்திற்காக, தமிழ் சமுதாயத்திற்காக, மனித உரிமைக்காக, குறிப்பாக பெண்களுடைய உரிமைக்களுக்காக போராடியவர் வாதாடியவர் தந்தை பெரியார் அவர்கள்.
தமிழ்நாட்டில் நடக்கக்கூடிய திராவிட மாடல் அரசு என்பது தேர்தல் நேரத்தில் என்னென்ன வாக்குறுதிகளை சொன்னோமோ அதனை நிறைவேற்றி இருக்கிறது. ஒன்று இரண்டு நிறைவேற்றாமல் இருந்தாலும் அவற்றையும் நிறைவேற்றாமல் பின் வாங்க மாட்டோம். மீதமுள்ள ஒன்று இரண்டையும் நிறைவேற்றுவோம் என்று சட்டமன்றத்திலேயே கூறி இருக்கிறேன்.
மகளிர் உரிமைத் தொகை, மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம், மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம், தமிழ் மாணவர்களுக்கு புதல்வன் திட்டம் காலை உணவு திட்டம் போன்றவை கொண்டுவரப்பட்டுள்ளது.
எப்படிப்பட்ட சிறப்பான ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் எப்படி இருந்து கொண்டிருக்கிறீர்கள், தொடர்ந்து இருப்பீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் நான் சட்டமன்றத்திலேயே கூறி இருக்கிறேன். ஏற்கனவே 5 முறை கருணாநிதி தலைமையில் ஆட்சிக்கு வந்து விட்டோம். 6ஆவது முறை என் தலைமையில் ஆட்சிக்கு வந்திருக்கிறோம். 7ஆவது முறையும் ஆட்சிக்கு நாம்தான் வருவோம் என்று சொல்லி இருக்கிறேன்.
ஆட்சிக்கு வரவேண்டும் பதவி சுகத்தை அனுபவிக்க வேண்டும், பந்தாவாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் 7 ஆவது முறை ஆட்சிக்கு வருவோம் என்று கூறவில்லை. உறுதியாக சொல்கிறேன்... மக்களுக்கு பணியாற்றத்தான் 7 முறை ஆட்சிக்கு ஆட்சிக்கு வருவோம் என்று கூறுகிறேன். மக்களுக்கு தொண்டாற்றதான் வரவேண்டும் என்று கூறுகிறேன்.
கலைஞர் அவர்கள் ஓய்வுக்கு ஓய்வு கொடுத்தவர். அவருடைய மகனாக இருக்கக்கூடிய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நான், என்றைக்கும் உழைப்பேன். உங்களுக்காக பாடுபடுவேன். தொடர்ந்து தமிழ்நாட்டிற்காகவும், தமிழ் சமூகத்திற்காகவும் உழைத்துக் கொண்டே இருப்பேன். உடலில் உயிர் இருக்கிற வரையில் தமிழ் இனத்திற்காக உழைப்பேன். அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்” என்றார்.