MK Stalin
MK Stalin File Image
தமிழ்நாடு

தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம் - புதுமுகங்களுக்கு வாய்ப்பு?

PT WEB

தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று வரும் 7ஆம் தேதி உடன் இரண்டாண்டுகள் நிறைவு பெற்று மூன்றாமாண்டில் அடியெடுத்து வைக்க உள்ளார். இந்த நிலையில் அமைச்சரவையில் சில மாற்றங்களை செய்ய அவர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டம் குன்னூரில் அனுமதி பெறாமல் தன்னுடைய ஹோட்டலுக்காக சாலை போடப்பட்டதாக புகாருக்குள்ளான சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நீக்கப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோல திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நீக்கப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு பதிலாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோயில் எம்எல்ஏ ராஜாவுக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜாவுக்கு வாய்ப்பில்லை என்றால் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த தமிழரசிக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

அதேபோல திருவாரூர் மாவட்டத்திற்கு அமைச்சர் இல்லாமல் இருக்கும் நிலையில் டிஆர்பி ராஜாவுக்கு அந்த பொறுப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது. அத்துடன் சில அமைச்சர்களின் இலாக்காக்களும் மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

TRB rajaa

திமுக அரசு 2021ஆம் ஆண்டு பொறுப்பேற்ற பிறகு 2022 மார்ச் மாதம் சிவசங்கர் மற்றும் ராஜ கண்ணப்பன் ஆகிய அமைச்சர்களுக்கு இடையேயான துறைகள் மட்டும் மாற்றி அமைக்கப்பட்டது. கடந்த டிசம்பர் 15ஆம் தேதி உதயநிதி புதிதாக அமைச்சரவையில் சேர்க்கப்பட்டு சில அமைச்சர்களின் துறைகள் மாற்றி அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.