தமிழ்நாடு

கோமதி மாரிமுத்துவிற்கு ரூ.10 லட்சம் பரிசு தொகையை வழங்கினார் ஸ்டாலின்

webteam

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவிற்கு, திமுக தலைவர் ஸ்டாலின்  ரூ.10 லட்சம் நிதியை பரிசாக வழங்கினார் 

தமிழக வீராங்கனையான கோமதி மாரிமுத்து, ஆசிய தடகளப்போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவுக்கான முதல் தங்கப்பதக்கத்தை பெற்று நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தார். அவருக்கு முதலமைச்சர் பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதுதவிர சமூக வலைத்தளங்களிலும் கோமதி மாரிமுத்துக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதனிடையே தங்கப் பதக்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு திமுக மற்றும் காங்கிரஸ் சார்பில் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டன. இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு திமுக சார்பில் ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி இன்று வீராங்கனை கோமதி மாரிமுத்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு ரூ.10 லட்சம் நிதியை ஸ்டாலின் பரிசாக வழங்கினார். அப்போது கோமதியின் தாயும் உடனிருந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோமதி மாரிமுத்து, ''கிராமங்களில் நிறைய காலியிடம் உள்ளது. அவற்றை தேர்ந்தெடுத்து மைதானங்களாக்க வேண்டும். மைதானத்துக்காகவே நீண்ட தூரம் பயணம் செய்து சோர்வடையாமல் இருக்க இது உதவும். இந்தியாவைப் பொறுத்தவரை விளையாட்டு வீரர்களுக்கு ஊட்டச்சத்தான உணவு கிடைப்பதில்லை. ஒலிம்பிக்கில் வெற்றி பெற கடுமையான பயிற்சி தேவை. ஒலிம்பிக் பயிற்சிக்கு அரசு உதவ வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.