ஜேஎன்யூ மாணவர் முத்துக்கிருஷ்ணன் மரணம் தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தது. அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், உயர் கல்விக்காக பிற மாநிலங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர் முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக பேரவையில் இன்று தி.மு.க. கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தது. இதுகுறித்துப் பேசிய, தி.மு.க. உறுப்பினர் ராஜேந்திரன், முத்துகிருஷ்ணன் ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் படித்தபோது ரோஹித் வெமுலா தற்கொலை தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறினார்.
மேலும், முத்துகிருஷ்ணன் உடற்கூறாய்வில் தற்கொலை என்று குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டிய ராஜேந்திரன், ஆனால் முத்துகிருஷ்ணனின் தந்தை தன்னுடைய மகன் தற்கொலை செய்யும் அளவிற்கு கோழை இல்லை என்று தெரிவித்துள்ளதாகவும், எனவே சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று கேட்டுக்கொண்டதையும் தெரிவித்தார்.
இதேபோல், எய்ம்ஸ் மருத்துவ மாணவர் சரவணன் மரணம், கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதாகவும் தி.மு.க. உறுப்பினர் ராஜேந்திரன் கூறினார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், உயர் கல்விக்காக பிற மாநிலங்களுக்கோ, டெல்லிக்கோ செல்லும் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்றும், மாணவர்களுக்கு பாதுகாப்பளிக்க கல்வி மற்றும் காவல்துறை அதிகாரிகள் கொண்ட குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.