கூடங்குளம் அணு உலை வளாகத்திற்குள் அணுக்கழிவு சேமிப்பு மையம் கட்டும் முடிவை மத்திய மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், அணு உலை வளாகத்திற்குள் அணுக்கழிவு சேமிப்பு மையம் கட்டுவது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மாறானது எனத் தெரிவித்துள்ளார். அணுக்கழிவு சேமிப்பு மையம் கட்டுவது தொடர்பாக ஜூலை 10-ஆம் தேதி கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.
அணு உலை வளாகத்திற்குள் அணுக்கழிவு சேமிப்பு மையம் கட்டி மக்களின் உயிரை சோதனைக்கூட பொருள்களாக்க மத்திய - மாநில அரசுகள்
முயற்சிக்கின்றனவோ என்ற சந்தேகம் எழுவதாக அவர் தெரிவித்துள்ளார். கருத்துக் கேட்புக் கூட்டத்தில் திமுகவின் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று மக்களின் அச்சத்தையும், சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பையும் அழுத்தமாக பதிவு செய்வார்கள் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு தொடர்பாக உச்சநீதிமன்றம் விடுத்துள்ள எச்சரிக்கையை நினைவில் கொண்டு கூடங்குளம் அணு உலை வளாகத்திற்குள் அணுக்கழிவு மையம் கட்டும் முடிவை மத்திய - மாநில அரசுகள் உடனடியாக கைவிடுவதுடன் அதனை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.