முதலமைச்சரின் ஆட்சி திரையில் கதாநாயகனாகவும், நிஜத்தில் வில்லனாகவும் மாறியதாக மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டினார். மக்களின் நலனுக்கு பதிலாக பாலியல் சுரண்டல் மற்றும் வன்முறைகள் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
திமுக முன்னாள் அமைச்சரும் கட்சியின் முதன்மை செயலாளருமான கே.என்.நேரு இல்ல திருமணம் சென்னை நீலாங்கரையில் இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் திமுக தலைவர் மு.க, ஸ்டாலின் தலைமை ஏற்று திருமணத்தை நடத்தி வைத்தார். இந்த நிகழ்வில் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் எதிர்க் கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும், துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி, ஆ.ராசா, பொன்முடி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின், “6 மாத காலமாக தமிழ்நாட்டில் ஒரு ஆட்சி நடந்துக்கொண்டிருக்கிறது; மன்னிக்கவும்.. ஆட்சி என்று சொல்லக்கூடாது காட்சியாகத்தான் நடந்துக்கொண்டிருக்கிறது. திரையில் கதாநாயகனாக நடித்து. நிலத்தில் ஒரு வில்லனாக உலா வந்துக்கொண்டிருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர். மாற்றம் மாற்றம் என எதிர்ப்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது.
எங்கு பார்த்தாலும் பாலியல் கொடுமைகள், வன்கொடுமைகள் என நடந்து கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் காரணமாக இருக்கக்கூடியவர்கள் யாரென்று உங்களுக்கு தெரியும், பெரும்பாலும் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களாக தான் இருக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது அவர்களின் கட்சியை பாலியல் சுரண்டல் கழகம் என பெயரை மாற்றிக் கொள்ளலாம். ஒரு பெண் மாவட்ட ஆட்சியருக்கே என்ன நடந்ததென்று பார்த்திருப்பீர்கள், த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் குறுஞ் செய்தி அனுப்பிய சர்ச்சையில் கூட முதலமைச்சர் இன்னும் அமைதியாக இருக்கிறார். தூய சக்தி தூய சக்தி என்று சொல்லி கொடுமையான ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. விரைவில் திமுக ஆட்சி அமையும்” என பேசியுள்ளார்.