சென்னை மதனந்தபுரத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி ஹாஷினியின் குடும்பத்தினரை சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.
போரூர் அருகேயுள்ள மதனந்தபுரம் மாதா நகர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பாபு- ஸ்ரீதேவி தம்பதி. இவர்களின் மகளான ஹாஷினி (7 வயது) பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரித்துக் கொலைசெய்யப்பட்டார். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட தன்வந்த் என்பவர் மீது பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், ஹாஷினி குடும்பத்தினரை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு கொடூரமாக சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளார். இது போன்ற சம்பவங்கள் சமீபகாலமாக தமிழகத்தில் நடைபெற்று வருகிறது இதற்கு காரணமானவர்களுக்கு உரிய வகையில் தண்டனை வழங்க வேண்டும் எனக் கூறினார்.
தமிழகத்தில் யார் முதலமைச்சராக இருப்பது என்ற போட்டி நடந்து கொண்டு இருக்கிறதே தவிர அரியலூர் நந்தினி சம்பவம், சிறுமி ஹாஷினி சம்பவம் குறித்து ஆய்வு செய்து அரசும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது தான் வேதனைக்குரிய ஒன்றாக இருக்கிறது எனவும் தெரிவித்தார்.