முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் முகநூல்
தமிழ்நாடு

பல்கலைக்கழக விவகாரம்.. ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம்.. கண்டனம் தெரிவித்த முதலமைச்சர்!

பல்கலைக்கழக வேந்தராக உள்ள ஆளுநருக்கு கூடுதல் அதிகாரத்தை வழங்கும் முடிவு, மாநில உரிமைகள் மீதான தாக்குதல் என முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

PT WEB

பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய விதிகளுக்கு கண்டனம் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதன்படி கல்வித்துறை சாராதவர்களையும் துணை வேந்தர்களாக நியமிக்கலாம் என்ற புதிய விதி, கூட்டாட்சித் தத்துவத்துக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரானது என்று அவர் கூறியுள்ளார்.

ஆளுநருக்கு வழங்கப்படும் இந்த அதிகாரத்தால் மத்திய பாரதிய ஜனதா அரசு, மத்தியில் அதிகாரங்களை குவித்துக்கொள்ள வழிவகுப்பதோடு, ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்டுள்ள மாநில அரசுகளை குறைத்து எடைபோடுவதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.

கல்வி என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் கைகளில்தான் இருக்க வேண்டும் என்றும், மத்திய அரசின் விருப்பப்படி இயங்கும் ஆளுநர்களால் அதிகாரம் செலுத்தப்படுவதாக இருக்கக்கூடாது என்றும் முதலமைச்சர் சாடியுள்ளார்.

தரவரிசையில் முன்னணியில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களைக் கொண்டுள்ள தமிழ்நாடு, எங்கள் கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி அதிகாரம் பறிக்கப்படுவதை பார்த்துக்கொண்டிருக்காது என்று கூறியுள்ள முதலமைச்சர், நமது அரசமைப்பு சட்டப்படி கல்வி பொதுப்பட்டியலில் உள்ளதால் பல்கலைக்கழக மானியக்குழு விதிகளை மாற்றுவது அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மானியக்குழுவின் புதிய விதிகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல, தமிழக அரசு இதனை சட்டப்பட்டியும், அரசியல் ரீதியாகவும் எதிர்க்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.