தமிழ்நாடு

ரயில்வே சுற்றறிக்கை ஆணவமாகவும், அடாவடித்தனமாகவும் இருக்கிறது: ஸ்டாலின்

ரயில்வே சுற்றறிக்கை ஆணவமாகவும், அடாவடித்தனமாகவும் இருக்கிறது: ஸ்டாலின்

webteam

தென்னக ரயில்வே அளித்துள்ள சுற்றறிக்கைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் ரயில்வே நிலைய அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறை இடையே நடக்கும் தகவல் பரிமாற்றம் தமிழில் இருப்பதை தவிர்க்க தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. மொழிப் பிரச்னையால் யாருக்கேனும் தகவல் புரியாமல் போவதை தவிர்க்க இந்தி அல்லது ஆங்கிலத்தில் தகவல்களை பரிமாறிக் கொள்ள தெற்கு ரயில்வே ஆணை பிறப்பித்துள்ளது. இந்தச் சுற்றறிக்கை தமிழ்நாட்டில் பெரும் எதிர்ப்பு மட்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

இந்நிலையில் இந்தச் சுற்றறிக்கை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், "அனைத்து ரயில்வே கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் மற்றும் நிலைய அலுவலர்கள் பேசும் போது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும், தமிழில் பேசக் கூடாது என்பது தமிழகத்திலேயே தமிழில் பேசத் தடை விதித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஆணவமாகவும் அடாவடித்தனமாகவும்  சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறார். 

தமிழ்நாட்டில் தமிழ் பேசக்கூடாது,  இந்தி பேசு என்பது மொழித்திணிப்பு மட்டுமல்ல மொழி மேலாதிக்கம்,  மொழி அழிப்பு. மேலும் மேலும் தமிழர்களின் உணர்வுகளுடன்  விளையாடி வருகிறார்கள், சீண்டிப் பார்க்கிறார்கள். இது போன்ற சில்லரைத்தனமான உத்தரவுகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் நாங்கள் முற்றுப்புள்ளி வைப்போம் என எச்சரிக்கிறேன்
” எனத் தெரிவித்துள்ளார்.