CAAவுக்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தி, பிப். 14 இரவை கறுப்பு இரவாக்கிய காவல்துறைக்கு கண்டனம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, பழைய வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் நேற்று போராட்டம் நடத்தினர். நீண்ட நேரம் போராட்டம் நீடித்ததால், கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் கேட்டுக் கொண்டனர். ஆனால் அவர்கள் அங்கிருந்து செல்லவில்லை. அப்போது, காவல்துறையினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டோருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.
இந்நிலையில் போலீசார் தடியடி நடத்தியதற்குப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தடியடி குறித்துக் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ள மு.க.ஸ்டாலின், ''குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்கள் மீது திட்டமிட்டு கடும் தாக்குதல் நடத்தி, பிப்ரவரி 14 இரவை கறுப்பு இரவாக்கிய எடப்பாடி அரசின் காவல்துறைக்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதுடன் அவர்கள் மீதான வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
தடியடிக்குக் கண்டனம் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக அறவழியில் போராடியவர்கள் மீது காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் தொடுத்திருப்பது அரசப்பயங்கரவாதம் எனத் தெரிவித்துள்ளார்.