தமிழ்நாடு

குற்றவாளியின் புகழ் பரப்பக் கூடாது: ஸ்டாலின்

குற்றவாளியின் புகழ் பரப்பக் கூடாது: ஸ்டாலின்

webteam

குற்றவாளியின் புகழ் பரப்பும் செயல்களை தமிழக அரசு உடனே கைவிட வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனிடம் புகார் கடிதம் அளித்துள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை உச்சநீதிமன்றம் குற்றவாளி எனத் தீர்ப்பளித்திருப்பதையும் அவருக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்திருப்பதையும் அந்தக் கடிதத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

குற்றவாளியின் பெயரில் உள்ள திட்டங்களின் பெயரில் மாற்றம் செய்ய வேண்டும் எனவும் குற்றவாளியின் படங்களை சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகள், அமைச்சர் அலுவலங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு விழாக்களில் கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது எனவும் ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். அம்மா உணவகம் , அம்மா குடிநீர், அம்மா உப்பு போன்ற குற்றவாளி பெயரில் தற்போது நடைமுறையில் உள்ள அரசு திட்டங்களுக்கு பெயரை உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும் எனவும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

உச்சநீதிமன்றம் குற்றவாளி என்று உறுதி செய்த பின்பும், ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாள் விழாவில் 69 லட்சம் மரம் நடும் திட்டத்தை அறிவித்து, அதை முதலமைச்சர் துவங்கி வைத்தது அரசு நிர்வாகம் பற்றி வாக்களித்த மக்களுக்கு தவறான செய்தியை சொல்லியிருக்கிறது என தெரிவித்துள்ள ஸ்டாலின், குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவரின் புகழ் பரப்பும் செயலில் அரசாங்கமே ஈடுபடுவதும், அரசு பணத்தில் திட்டங்களை அறிவித்து குற்றவாளியின் பெயரில் செயல்படுத்தி வருவதும் எதிர்கால தலைமுறையினருக்கும், இளைய தலைமுறையினருக்கும் மக்களாட்சியின் மாண்பின் மீது மிகப்பெரிய அவநம்பிக்கையை ஏற்படுத்தி விடும் எனவும் ஸ்டாலின் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.