அதிமுக ஆட்சிக்கு ஒட்டு மொத்த எதிர்ப்பை தெரிவிப்போம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மிக பெரிய குழப்பம் ஏற்பட்டு மக்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டு உள்ள சூழ்நிலையில் ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் நாளை சட்டமன்றம் கூடுகிறது. அப்போது, முதலமைச்சராக பொறுப்பேற்று உள்ள எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவார். அந்த வாக்கெடுப்பில் திமுக பங்கேற்று அதிமுக ஆட்சிக்கு ஒட்டு மொத்த எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் திமுகவின் 89 சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களிப்போம்.
மறைமுக வாக்கெடுப்பு நடத்தப்படும் நிலை வந்தால் அதை நாங்கள் வரவேற்க தயாராக இருக்கிறோம். காங்கிரஸ் கட்சியினரும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக தொலைக்காட்சிகளில் செய்திகளை பார்த்தேன்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா பெயருக்கு பாதகமாக உச்சநீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை உறுதி செய்த நேரத்தில் ஓ.பி.எஸ்., அணிகள் எப்படி கொண்டாடினார்களோ, அதேபோல் சசிகலா சிறைக்கு சென்றதை கொண்டாட எம்எல்ஏ-க்கள் கூவத்தூர் சென்று இருப்பார்கள் என்று நான் கருதுகிறேன் என அவர் தெரிவித்தார்.