தமிழ்நாடு

“சிலை திறப்பை டிவியில் பார்த்துக் கொள்கிறேன்” - மு.க.அழகிரி

webteam

கருணாநிதியின் சிலை திறப்பு நிகழ்ச்சியை தொலைக்காட்சி‌யில் பார்த்துக் கொள்வதாக அவரது மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். 

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் மாதம் காலமானார். அவரது மறைவுக்கு பின் திமுக தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் கருணாநிதியின் சிலை அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்படும் என திமுக அறிவித்தது. ஏற்கெனவே அங்கு இருந்த அண்ணா சிலைக்கு அருகில் கலைஞர் சிலை அமைக்கப்படும் என்றும், அண்ணா சிலை புனரமைக்கப்பட்டு மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்படும் என்றும் திமுக அறிவித்தது. 

அதன்படி சமீபத்தில் அண்ணா சிலை அப்புறப்படுத்தப்பட்டு, புனரமைக்கும் வேலை நடந்து வந்தது. இரு சிலைகளும் டிசம்பர் 16ம் தேதியான இன்று திறக்கப்படும் என திமுக அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் அகில இந்திய தலைவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருணாநிதி சிலையை திறந்து வைப்பார்கள் எனவும் திமுக தெரிவித்தது. 

அதன்படி இன்று நடைபெறவுள்ள விழாவில் சோனியா காந்தி பங்கேற்று கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார். இச்சிலை திறப்பு விழாவில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோரும் பங்கேற்று, வாழ்த்துரை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் சிலை திறப்பு விழாவுக்கு பல திமுக பிரமுகர்களும் வருகை தருவார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சிலை திறப்பு விழாவில் மு.க.அழகிரி கலந்துகொள்வாரா என்று தகவல்கள் வெளியாகவில்லை. இதற்கிடையே  மதுரையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் அழகிரி கலந்து கொண்டார். அப்போது சிலை திறப்பு நிகழ்ச்சி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, சிலை திறப்பு நிகழ்ச்சியை தான் தொலைக்காட்சி‌யில் பார்த்துக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்