தமிழ்நாடு

சென்னையில் உருவாகும் மியாவாக்கி காடுகள்.. மும்முரம் காட்டும் தமிழக அரசு

webteam

சென்னையில் பல இடங்களில் காடுகளை வளர்க்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

காணும் போதே குளிர்ச்சி தரும் பசுமையான காடுகள் சென்னையில் இருந்தால் எப்படி இருக்கும்? ஆம். உயர்ந்து நிற்கும் கட்டுமானங்களுக்கு இடையே ரம்மியமான ‌காடுகள் சென்னையிலும் சாத்தியப்பட உள்ளன.

ஜப்பான் தாவரவியல் நிபுணர் அகிரா மியாவாக்கி என்பவரால் கண்டறியப்பட்ட ஒரு சிறந்த தாவர தொழில்நுட்ப முறைதான் மியாவாக்கி நகர்ப்புற காடுகள். ஒரே இடத்தில் மண்ணின் தரத்திற்கு ஏற்ப ‌அடர்த்தியான மரங்களை மியாவாக்கி மூலம் வளர்க்க முடியும்.

சென்னையில் காலியாக உள்ள நிலங்கள், நீர்நிலைகளின் கரைகளில் மியாவாக்கி காடுகளை உருவாக்க அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டிருந்தார். அதன்படி, சென்னை கோட்டூர்புரம் பறக்கும் ரயில் நிலையம் அருகில் அதற்கான பணி வேகமெடுத்துள்ளது. அப்பகுதியில் காலியாக உள்ள அரை ஏக்கர் நிலத்தில் சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் மியாவாக்கி காடு உருவாகி வருகிறது.

முதல்கட்டமாக உரம் கலந்த மண் அந்த இடத்தில் நிரப்பப்பட்டு வருகிறது. நாட்டு மரங்களான புங்கை, பூவரசம், வேம்பு உள்ளிட்ட அரிய வகை மரங்கள் இங்கு வளர்க்கப்பட உள்ளன.