தமிழ்நாடு

“கலப்பு திருமணம் செய்தவங்கள ஊரில் இருந்து ஓதுக்கி வைக்கிறாங்க”- திருச்சி ஆட்சியிடம் புகார்

kaleelrahman

திருச்சியில் கலப்பு திருமணம் செய்தவர்களை ஊரில் இருந்து ஓதுக்கி வைப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் சிலர் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் திருப்பைஞ்ஞீலி ஊராட்சியில் வசிக்கும் சீத்தாலட்சுமி - பாஸ்கரன், காவ்யா - ரெங்கநாதன், அஞ்சலிதேவி - கருணாநிதி, மேனகா - பிரபு, கமலம் - சௌந்தரராஜன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் கலப்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனால் ஊராட்சியில் வசிக்கும் சிலர் இவர்களை ஒதுக்கி வைப்பதாகவும், சாதி பெயரைச் சொல்லி அவமானப்படுத்துவதாகவும் திருச்சி மாவட்ட ஆட்சியிரிடம் அண்மையில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் மண்ணச்சநல்லூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தலைமையில் பாதிக்கப்பட்ட தம்பதியினர் மற்றும் திருப்பைஞ்ஞீலி ஊராட்சி மன்றத் தலைவர் தியாகராஜன் உள்ளிட்டோர் அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். இதில், கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களை கோயிலில் சாமிகும்பிட தடை விதிக்கக் கூடாதெனவும், திருவிழாவிற்கு வரி செலுத்துவதை ஏற்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

மேலும், சுப நிகழ்ச்சி மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் எனவும், கலப்பு திருமணம் செய்தவர்கள் கிராமத்தில் வந்து தங்கினால் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட எதிர் தரப்பினர் ஏற்றுக் கொண்டனர்.

இந்த அமைத்தி பேச்சுவார்த்தையால் இந்த ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கலப்பு திருமணம் செய்தவர்களை கிராமத்திலிருந்து ஒதுக்கி வைத்த பிரச்னை முடிவுக்கு வந்ததால் கலப்பு திருமணம் செய்த தம்பதியினர் நிம்மதிப் பெருமூச்சு விட்டு சந்தோஷத்தில் மூழ்கினர். இந்நிகழ்வில் மண்ணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார், மண்டல துணை வட்டாட்சியர் கார்த்தி, உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்கள், கிராம மக்கள் பங்கேற்றனர்.