மதுபோதையில் 3 இளைஞர்கள் நடந்து சென்ற பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதால் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் ரயில் நிலைய சுரங்கபாதை அருகே பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கஞ்சா மற்றும் குடிபோதையில் இருந்த மூன்று இளைஞர்கள் அவ்வழியே நடந்து சென்றதாக கூறப்படுகிறது. அந்த மூன்று இளைஞர்களில் ஒருவர் அருகில் வந்து கொண்டிருந்த அந்த இளம்பெண் மீது விழுந்து தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது. மேலும் இந்தச் சம்பவத்தின் போது மற்ற இரண்டு இளைஞர்களும் அந்த பெண்ணை சுற்றி நின்று கொண்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் பயந்து போன அப்பெண் கூச்சலிட்டுள்ளார். உடனே அருகில் இருந்த பொதுமக்கள் அந்த மூன்று பேரையும் பிடித்து தர்ம அடி கொடுத்து பீர்க்கன்கரணை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். போலீஸ் விசாரணையில் மூவரும் படப்பையை சேர்ந்த அலெக்ஸ்(19), செந்தில்குமார்(19), பாலாஜி(19) என்பதும் இவர்கள் பெயிண்டர் வேலை செய்வதும் தெரியவந்தது. மது மற்றும் கஞ்சா போதையில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதையும் ஒப்புக் கொண்டுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் பீர்க்கன்கரணை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.