தமிழ்நாடு

சசிகலா அணியினர் ஐ.என்.எஸ் கப்பலில் ஆலோசனை

சசிகலா அணியினர் ஐ.என்.எஸ் கப்பலில் ஆலோசனை

webteam

சென்னை துறைமுகத்தில் இருந்து ஐஎன்எஸ் போர்க்கப்பலில் சசிகலா அம்மா அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களும், அமைச்சர்களும் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் இணைவது குறித்து கப்பல் பயணத்தில் ஆலோசனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. முன்னாள் முதலமைச் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு ஓ.பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். அ.தி.மு.க.வுக்கு 2 அணி நிர்வாகிகளும் சொந்தம் கொண்டாடிய நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு முன்னதாக அ.தி.மு.க.வும், அக்கட்சியின் சின்னமான இரட்டை இலையும் முடக்கப்பட்டது. இந்த நிலையில் டி.டி.வி.தினகரன் அணியை சேர்ந்த அமைச்சர் விஜயபாஸ்கர், வருமான வரி சோதனையில் சிக்கினார். தொடர்ந்து சசிகலா அணிக்கு பல்வேறு சிக்கல் எழுந்து வந்த நிலையில் அந்த அணியினர் நேற்று ஆலோசனை நடத்த தொடங்கினர். நேற்று இரவு மின்துறை அமைச்சர் பி.தங்கமணி இல்லத்தில் அமைச்சர்கள் திடீரென கூடி அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் சசிகலா அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் அனைவரும் அவசரமாக சென்னை வர உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதிமுக அம்மா அணி சார்பில் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். இதனையடுத்து சென்னை துறைமுகத்தில் இருந்து ஐஎன்எஸ் போர்க்கப்பலில் பயணம் மேற்கொண்டுள்ள சசிகலா அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களும், அமைச்சர்களும் ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் இணைவது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.