தமிழ்நாடு

சின்னக்கொம்பன் காளைக்கு பயிற்சி அளிக்கும் விஜய பாஸ்கர்...! (வீடியோ)

சின்னக்கொம்பன் காளைக்கு பயிற்சி அளிக்கும் விஜய பாஸ்கர்...! (வீடியோ)

webteam

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது சின்னக்கொம்பன் காளைக்கு ஜல்லிக்கட்டு வருவதையொட்டி பயிற்சி அளித்து வருகிறார்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் அதிக ஆர்வம் கொண்டவர். இவரது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரிலுள்ள தோட்டத்து வீட்டில் அவர்,  சின்னக்கொம்பன், வெள்ளைக் கொம்பன், சந்தனக் கொம்பன் உள்ளிட்ட 5 ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார்.

அவர் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் வளர்த்து வந்த கொம்பன் என்ற காளை அலங்காநல்லூர், அவனியாபுரம் உள்ளிட்ட தமிழகத்தில் நடந்த 50-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொண்டது. இந்தக் காளை மாடுபிடி வீரர்களின் சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறது. இதுவரை எந்த ஒரு ஜல்லிக்கட்டு போட்டியிலும் பிடிபடாத காளை என்ற பெயரை எடுத்தது.

இந்தக் கொம்பன் காளை கடந்த 2018-ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் தென்னலூர் ஜல்லிக்கட்டு வாடிவாசலை விட்டு சீறிப்பாய்ந்து வெளியே வந்தபோது அங்கு நடப்பட்டிருந்த மரத்தில் மோதி அங்கேயே உயிரிழந்தது. ஆசையோடு வளர்த்து வந்த கொம்பன் காளையின் உயிரிழப்பால்  அமைச்சர் விஜயபாஸ்கர் மனவேதனை அடைந்தார். 

அதன்பின்பு வாங்கிய காளைகளுக்கு இவர் சின்னக் கொம்பன், வெள்ளைக் கொம்பன், சந்தனக் கொம்பன் எனப் பெயர் சூட்டி வளர்து வருகிறார். இந்தக் காளைகளை கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் களமிறக்கினார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொண்ட இந்தக் காளைகளை எந்த வீரர்களாலும் பிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் அடுத்த மாதம் தொடங்க உள்ள வேளையில் அமைச்சர் விஜயபாஸ்கர் சின்னக் கொம்பன் காளைக்கு அவரே பயிற்சி அளித்து வருகிறார். அதற்கான வீடியோ காட்சிகள் பலரையும் ஈர்த்துள்ளது.