சென்னையில் கொரோனா நோயாளிகளுக்காக புதியதாக 500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதில் சென்னையில் மட்டும் இதுவரை 23,298 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இன்று மட்டும் சென்னையில் சிகிச்சை பெற்று வந்த 8 பேர் சிகிச்சைப் பலனின்றி கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். 3 பேரின் சடலங்களையும் பாதுகாப்பான முறையில் அடக்கம் அல்லது தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
இதேபோல், ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஓமந்தூரார் மருத்துவமனையில் நேற்று இரவு முதல் தற்போது வரை 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் ஆம்புலன்ஸ் சேவை பெறுவதற்கான தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற அமைச்சர் விஜயபாஸ்கர், “சென்னை கிண்டி கிங் பரிசோதனை மையத்தில் 500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மேற்கொண்டு 88 தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே யாரும் பீதியடைய வேண்டாம்.
சென்னையில் உள்ளவர்கள் கொரோனா அவசர சிகிச்சைக்கு 044-4006 7108 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸ் சேவை பெறலாம். மேலும் 108 ஆம்புலன்ஸ் சேவையை எவ்வித காலதாமதமுமின்றி பெறுவதற்கு ஏதுவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.