ஈரோடு ஏன் முடக்கப்பட்டது என அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்
தமிழகத்தில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இதனையடுத்து தமிழகத்தில் இதுவரை 9 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதிகபட்சமாக கேரளா மற்றும் மகாராஷ்ட்டிராவில் 10 மாவட்டங்களை தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் மூன்று மாவட்டங்களிலும் அத்தியாவசியத் தேவை தவிர அனைத்தையும் முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவை மார்ச் 31 ஆம் தேதி வரை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே ஈரோடு ஏன் முடக்கப்பட்டது என பலரும் இணையதளங்களில் கேள்வி எழுப்பினர். அங்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்றும் சந்தேகம் கிளப்பினர். இதற்கு விளக்கம் அளித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர், தாய்லாந்தைச் சேர்ந்த இருவர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு பெருந்துறை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.