“நான் கோட்டைக்கு போனால் அமைச்சர். மருத்துவமனைக்கு போனால் டாக்டர். ஜல்லிக்கட்டு போட்டிகள் என்றால் வேட்டியை மடித்துகட்டிக்கொண்டு களத்தில் இறங்கி நிற்பேன்” என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
புதுக்கோட்டை திலகர் திடலில் அதிமுக சார்பில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு பொற்கிழி வழங்கும் விழா மற்றும் கலைத்திருவிழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நலிந்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கி பேசினார். அப்போது கூறுகையில் நாட்டுப்புற கலைகளை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் புதுக்கோட்டையில் இதுபோன்று கலைத்திருவிழா நடத்தப்பட்டு நாட்டுப்புற கலைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்றார்.
மேலும் பேசிய அவர், “ தமிழ்களின் பாரம்பரியமான நாட்டுப்புற கலைகளும், ஜல்லிக்கட்டு போட்டிகளும் எக்காலத்திலும் அழியாது. நான் கோட்டைக்கு போனால் அமைச்சர். மருத்துவமனைக்கு போனால் டாக்டர். ஜல்லிக்கட்டுன்னு வந்துட்டா வேட்டிய மடித்து கட்டிக் கொண்டு களத்தில் காளையின் மூக்காணாங் கயிற்றை அறுக்கும் தமிழன் நான்.” என்றார்.
Read Also -> புழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்
தொடர்ந்து பேசிய அவர், தன்னை வசைப்பாடியவர்களின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்ற ஒரே வாரத்தில் புதுக்கோட்டையில் போட்டிக்கூட்டம் நடத்த உள்ளதாகவும் அதில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்றும் தெரிவித்தார். அக்கூட்டத்தில் பலரின் சுயரூபத்தை தோலுரித்து காட்டப்போவதாகவும் தினகரனுக்கு விஜயபாஸ்கர் சவால் விடுத்தார்.
கடந்த 15 ம் தேதி புதுக்கோட்டையில் நடந்த அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் அமைச்சர் விஜயபாஸ்கரை கடுமையாக விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.