தமிழ்நாடு

புயல் பாதிப்பை மீட்கும் துப்பரவு பணியாளர்களுக்கு ரூ.1,000 மதிப்பூதியம்

புயல் பாதிப்பை மீட்கும் துப்பரவு பணியாளர்களுக்கு ரூ.1,000 மதிப்பூதியம்

webteam

கஜா புயல் ‌பாதித்த மாவட்டங்‌களில் துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டுள்‌ள பணியாளர்களுக்கு மதிப்பூதியமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. 

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை புரட்டிப் போட்ட கஜா புயலுக்கு இதுவரை 63 பேர் உயிரிழந்தனர். 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமான தென்னை, வாழை, முந்திரி மரங்கள் வேரோடு முறிந்து கிடக்கின்றன. இதனால் டெல்டா விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை தொலைத்து தவிக்கின்றனர். மின் விநியோக சீரமைப்பு, மரங்களை அப்புறப்படுத்தும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அடிக்கடி மழையும் பெய்து வருவதால் வீடுகளை இழந்த மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பல இடங்களில் கூடுதலாக மின்வாரிய ஊழியர்கள் மற்றும் துப்பரவு பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டுள்‌ள பணியாளர்களுக்கு மதிப்பூதியமாக ரூ.1,000 வழங்கப்படும் என ஊரக வ‌ளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.‌வேலுமணி தெரிவித்துள்ளதாக, பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மொத்தம்  7 ஆயிரத்து 84 துப்புரவுப் பணியாளர்கள் ‌கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள மக்களுடன்‌ இணைந்து பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வரும் துப்புரவுப் பணியாளர்களை பாராட்டும் விதமாகவே தலா ஆயிரம் ரூபாய்‌ வழங்கப்பட உள்ளது. மேலும் அரசி, போர்வை, கைலி உள்ளிட்ட 16 பொருட்கள் அடங்கி‌ய பரிசுப் பெட்டகம் ஒன்றும் அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.