பழிவாங்கும் எண்ணம் திமுக அரசுக்கு இல்லை என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அமைச்சர் “புகாரின் அடிப்படையிலேயே லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று வருகிறது. பழிவாங்கும் எண்ணம் திமுக அரசுக்கு இல்லை” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு மற்றும் அவருடன் தொடர்புடைய 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2014ஆம் ஆண்டு உள்ளாட்சித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற எஸ்.பி வேலுமணி, பதவியை தவறாக பயன்படுத்தி ஒப்பந்த வேலைகளை தனது சகோதரர் மற்றும் நெருக்கமானவர்களுக்கு வழங்கியதாக புகார்கள் எழுந்தன. அதனடிப்படையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் அவரின் சகோதரர் அன்பரசன் மற்றும் 10 நிறுவனங்கள் உள்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை.
அதன் முதல் தகவல் அறிக்கையில், முதல் நபராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் பெயர் இடம்பெற்றுள்ளது. செந்தில் அண்ட் கோ மற்றும் ஸ்ரீ மஹா கணபதி ஜுவல்லரியின் பங்குதாரரான, எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் அன்பரசன் 2ஆவது நபராக உள்ளார். கே.சி.பி.என்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன நிர்வாக இயக்குநரும், ஆலயம் ஃபவுண்டேஷன் நிறுவனத்தின் பங்குதாரர் என்பது உள்ளிட்ட பல சில நிறுவனங்களில் பொறுப்பு வகித்து வரும் சந்திர பிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கே.சி.பி.என்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன இயக்குநர் சந்திரசேகர், எஸ்.பி பில்டர்ஸ் நிறுவன உரிமையாளர்கள் முருகேசன் மற்றும் ஜேசு ராபர்ட் ராஜா, சி.ஆர் கன்ஷ்ட்ரக்ஷன்ஸ் நிறுவன உரிமையாளர் கு.ராஜன் ஆகியோர் என இன்னும் பலர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.